கோவை மாவட்டம், மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர், இலவச பயணச்சீட்டு வேண்டாம் எனக் கூறி நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலாகிய நிலையில் அவை திட்டமிடப்பட்டு சித்தரிக்கப்பட்டதாக அளித்த புகாரில் மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, இந்த விடியோவை அதிமுக உறுப்பினராக பிரத்திவ்ராஜ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இந்த விடியோ வைரலான நிலையில், திமுகவினர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், வேண்டுமென்றே அதிமுகவைச் சேர்ந்த முதாட்டியை பேருந்து பயணம் செய்ய வைத்து நடந்துநரிடம் தகராறு செய்து, அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாகத் தெரிவித்தனர். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அதிமுகவைச் சேர்ந்த பிரத்திவ்ராஜ்(40), மதிவாணன்(33), விஜயானந்த் ஆகியோர் திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டதால் அவர்கள் 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் இன்று (அக்.1) வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மூதாட்டி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு பேருந்தில் ஓசியில் போக மாட்டேன் பாட்டியின் வைரல் வீடியோ