கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி - சோமனூர் பூளாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் அப்பகுதியில் விசைத்தறி கூடம் நடத்திவருகிறார். இவரது மனைவி பூவாத்தாள், தனது சகோதரரின் தொழிலுக்காக அதே பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ரேவதி என்பவரிடம் ரூ.10 லட்சம் வட்டிக்கு வாங்கி, அதற்கு அடைமானமாக சொத்து பத்திரங்களைக் கொடுத்துள்ளார்.
வாங்கிய கடனில் ஏற்கனவே ரூ.8 லட்சம் கொடுத்த நிலையில், மீதித் தொகை 2 லட்ச ரூபாயும், இதற்கு வட்டி 2 லட்ச ரூபாய் என 4 லட்ச ரூபாயினையும் ரேவதியிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சொத்து பத்திரத்தையும், கடன் வாங்கும் போட்ட ஒப்பந்த பத்திரத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. கடந்த 2ஆம் தேதி இது குறித்து பூவாத்தாள் கேட்டபோது, வட்டி தொகை இன்னும் 10 லட்சம் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதனால் இருவரிடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், ரேவதி, பூவாத்தாளை தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்த அவர் தலையில் காயமடைந்து மயக்கநிலைக்குச் சென்ற நிலையில் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இது தொடர்பாக பூவாத்தாளின் மகன் செந்தில்குமார் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் பாஜக பிரமுகர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் ரேவதி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டிக்டாக் காணொலிகளில் மோசடி: 5 பேர் மீது வழக்குப்பதிவு!