கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கரோனா பாதிப்பு காரணமாக புதிய வரிகள் இருக்கும் என்று பலரும் எண்ணிய நிலையில், சென்ற ஆண்டை விட இம்முறை அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று விவசாயிகள் விவகாரத்தில் பொய்களை வைத்துக் கொண்டு கற்பனையில் எதிர்க்கட்சிகள் பேசி கொந்தளிப்பை ஏற்படுத்தும் முயற்சியை செய்துவருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்காக மண்டிகளுக்கு கடந்த ஆண்டே 500 கோடி ஒதுக்கியது. இந்நிலையில், பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நடந்துவருகிறது.
உலக அரங்கில் பாரத மாதாவின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று சிலர் செயல்பட்டுவருகின்றனர். 2004-2014 வரை 10 ஆண்டுகள் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தமிழ்நாட்டில் 10 அமைச்சர்கள் இருந்தும் பெரிய அளவில் மூலதனம் வரவில்லை. ஆனால் தற்போது 2 லட்சம் கோடி அளவிற்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் பெயரை வைத்து கொண்டு டிடிவி தினகரன் ஏற்கனவே ஒரு கட்சியை வைத்துள்ளார். 2019க்கு பிறகு திமுக பலவீனமாகி வருகிறது. திமுகவின் அடிப்படை கருத்தே அடித்தளம் இல்லாத ஒன்று.
தமிழுக்காக ஏதேனும் ஒரு அரசியல் கட்சி செயலாற்றுகிறது என்றால் அது பாஜகதான். மும்மொழி கொள்கை 1985ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி பிரதமாக இருக்கும் போது நிர்ணயிக்கப்பட்டது. அப்போது அது ஆங்கிலம், இந்தி அல்லது சமஸ்கிருதம் என்று இருந்தது. அதனை நாங்கள் மாற்றி ஆங்கிலம் அல்லது பிற இந்திய மொழிகள் என்று மாற்றியுள்ளோம்.
ஸ்டாலின் வெள்ளியில் வேல் கொடுத்ததால்தான் வாங்கி வைத்துக்கொண்டார். வேல் வாங்கிக்கொண்டு தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த விஷயத்தில் ஸ்டாலின் மாறினால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விவகாரங்கள் எல்லாம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன” என்றார்.
இதையடுத்து சீனா-இந்தியா போர் குறித்து தெரிவிக்கையில், “இரு நாட்டு போரின்போது முதுகெலும்பு இல்லாத பிரதமராக இருந்த நேருவால் தான் 42 ஆயிரம் சதுர கிமீ நிலப்பரப்பு இன்று சீனாவின் கைவசம் உள்ளது” என்று சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்தார்.
இதையும் படிங்க...வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!