ஆக்ஸண்ட் அகாடமி நீட் பயிற்சி மையத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் செயல்பட்டுவருகிறது. அதன் கிளை அலுவலகம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டுவருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பயிற்சி மையம் ஒவ்வொரு மாணவரிடமும் தலா ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலித்துள்ளது.
இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக வகுப்புகள் சரிவர நடத்தப்படவில்லை என்றும், குடிநீர் வசதி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள், அலுவலக மேலாளர் ராஜேஷிடம் கேட்டபோது, பண்டிகை கால விடுமுறை, மாதாந்திர மின் தடையால் ஒரு நாள் விடுமுறை, டிரான்ஸ்ஃபார்மர் வெடித்ததால் ஒரு நாள் விடுமுறை அளித்ததாகவும் அதனால்தான் பாடங்கள் நடத்தவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதன்பின், அங்கு கட்டட வாடகை அளிக்காததாலும், ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்காததாலும்தான் அவர்கள் பாடம் நடத்த வரவில்லை என்று பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியவந்தது.
எனவே பணத்தை வாங்கிக்கொண்டு பாடங்களை எடுக்காததால் கல்வி பாதிக்கப்படுவதால், மோசடி செய்த அலுவலக மேலாளர், பொது மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்களும் பெற்றோர்களும் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் கூடிய விரைவில் இப்பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.