கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'கோவை விமான நிலையத்திற்கு இதுவரை 54 விமானங்கள் வந்துள்ளன. இதில் வந்தவர்கள் 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவி விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றோம்.
கோவையில் சமீபகாலமாக பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது இல்லை என்பதையும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை என்பதையும் உணர்கின்றோம். இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் திங்கள்கிழமை முதல் முகக்கவசம் இன்றி வெளியில் வந்தால், ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா வைரஸ் தன்மை சமீபத்தில் மாறியுள்ளது. இதை மக்கள் உணர வேண்டும் , அலட்சியமாக இருக்கக் கூடாது. முகக் கவசம் அணியாமல் இருந்ததற்காக மாநகராட்சி இதுவரை 4 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளது. கோவையில் இதுவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 29 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் மூன்று பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்தார்.