தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவா, முத்துலட்சுமி தம்பதியினர். ஜீவா கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஆரூரான் என பெயரிட்டுள்ளனர். பிறந்தது முதலே குழந்தை மூச்சு விட சிரமபட்டு வந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்களிடம் காண்பித்தபோது இதய துடிப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள ஆர்.கே மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளனர். குழந்தைகள் சிறப்பு நல மருத்துவர் மணிராம் மற்றும் உஷா நந்தினி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், குழந்தையின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையை தொடர்பு கொண்டு குழந்தையின் நிலை குறித்து தெரிவித்துள்ளனர்.
![குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலனஸ் ஓட்டுனர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-04-ambulance-visu-7208104_11012021174143_1101f_1610367103_721.jpg)
இதனையடுத்து, மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு குழந்தையை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளபட்டது. இதனை தொடர்ந்து, TN 49 BF 2262 என்ற எண் கொண்ட வாகனத்தை பார்த்தசாரதி (30) என்ற ஓட்டுநர் காலை தஞ்சாவூரில் இருந்து குழந்தையை ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.
முன்னதாக, குழந்தையின் நிலை குறித்த தகவல்களை தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கத்தினருக்கு தெரிவிக்கபடவே காவல்துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் விரைவாக வாகனம் கோவை வருவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டன.
தஞ்சாவூர் மருத்துவமனையில் காலை 5.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கரூர், காங்கேயம், பல்லடம், சூலூர் வழியாக இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்களில் 270 கி.மீ.க்கு மேல் பயணித்து அந்த வாகனத்தை பார்த்தஜசாரதி கோவைக்கு வந்து சேர்த்துள்ளார்.
குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிகபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுனரான பார்த்தசாரதி கூறுகையில், "குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வாகனத்தை வேகமாக இயக்கினேன். அனைவரது ஒத்துழைப்பு காரணமாக குறுகிய நேரத்தில் விரைந்து வர முடிந்தது. தற்போது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.