மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வரும் உலகப்புகழ் பெற்ற நீலகிரி மலை ரயிலை, தனியார் ஓட்டல் நிறுவனம் இன்று கட்டணம் செலுத்தி ஒட்டு மொத்தமாக ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயிலை இயக்கிய இந்நிறுவனம், உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலின் அடையாளத்தையே மாற்றி, அத்தனியார் நிறுவனப் பெயர் பொறித்த ஸ்டிக்கரை ரயிலின் அனைத்து பக்கங்களிலும் ஒட்டியதோடு, இருக்கைகளிலும் பெயரை பொருத்தியது.
மேலும், தங்கள் நிறுவன பெண்களை பணிக்கு அமர்த்தி, நபர் ஒருவருக்கு 3,000 ரூபாய் என டிக்கெட் கட்டணம் நிர்ணயித்து விற்பனையிலும் இறங்கியது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரயில்வே நிர்வாகம் தனியாருக்கு ரயிலை வாடகைக்கு விட்டது எப்படி, தனியார் நிறுவனம் பத்து மடங்கிற்கும் மேல் கட்டணத்தை உயர்த்தி டிக்கெட் விற்கவும் அதற்காக ஆட்களை நியமித்து கொள்ளவும் அனுமதித்தது எப்படி என்ற கேள்விகளும், நூற்றாண்டையும் கடந்து இந்திய ரயில்வே துறையால் இயக்கப்பட்டு தேசிய அடையாளமாக கருதப்படும் நீலகிரி மலை ரயில் சேவை தனியாருக்கு வழங்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகங்களும் எழுந்தன.
கமர்ஷியல் ட்ரைன் என்பது தனியாக சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட தனியாருக்கு வாடகைக்கு விடப்படுவது வழக்கமான நடைமுறை தான் என்றும், வழக்கமாக இயக்கப்படும் மலை ரயிலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்த ரயில்வே நிர்வாகம், வழக்கமான மலை ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்றும் விளக்கம் அளித்த போதிலும், இன்று மீண்டும் அதே தனியார் ஓட்டல் நிர்வாகத்தால் மலை ரயில் இயக்கப்பட்டது.
இதனை அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ், மதிமுக, எஸ்.டி.பி.ஐ, முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக முழக்கமிட்டவாறே ரயில் நிலையம் அருகே செல்ல முயன்றனர். அப்போது தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். ஆனால், தடுப்புகளை தாண்டியும் சிலர் ரயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டம் காரணமாக ரயில் நிலையம் அருகே பரபரப்பு நிலவினாலும், தனியார் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட மலை ரயில், காலை 8.30 மணிக்கு பயணிகளோடு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: திமுகவினர் ஐ பேக் நிறுவனத்தின் தலையாட்டி பொம்மைகள் - அமைச்சர் வேலுமணி தாக்கு!