கோயமபுத்தூர்: ஈஷா யோகா மையம் சார்பில் மண்வளம் காப்போம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு அதன் நிறுவனர் வாசுதேவ் மோட்டார் சைக்கிளில் 100 நாள் பயணம் மேற்கொண்டார். அதன் நிறைவு நாள் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இருசக்கர வாகனத்திலேயே மேடையில் ஏறினார். இந்நிகழ்வில் பேசிய அவர், மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் 30 ஆயிரம் கிலோமீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளேன். நூறாவது நாளாக இன்று(ஜூன் 21) கொடிசியா மைதானம் வந்துள்ளேன். கடந்த மார்ச் 21 ஆம் தேதி லண்டனில் இந்த பயணம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக இந்தியா வந்து பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் செய்துள்ளேன்.
எழுபத்தி நான்கு நாடுகளில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 8 மாநிலங்கள் மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள 320 கோடி மக்களின் ஆதரவை இவ்வியக்கம் பெற்றுள்ளது. மண் காக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உருவாக வேண்டும். அதை நாம் சத்தமாக பேச வேண்டும்.
விவசாய நிலங்களில் இயற்கை முறையில் விவசாயம் நடக்க வேண்டும். மக்கள் பேசினால் தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். மண்ணை காப்பாற்ற வேண்டும். மனிதனை வேறுபடுத்த பல வழிகள் கண்டுபிடித்தோம், ஆனால் அனைவரையும் சேர்க்க வழியைக் கண்டுபிடிக்கவில்லை. வாழ்வில் யோகாசனம் மிகவும் முக்கியம். அனைவரும் ஒரு நாளில் 15 நிமிடங்களாவது மண்ணைப் பற்றி ஏதாவது பேசவேண்டும், என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் அனுமதிக்க வேண்டும்'