கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று அதிமுக செய்தித் தொடர்பாளர் செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா இருவரும் மிகவும் கீழ்த்தரமாக பேசி வருகின்றனர். 2 ஜி வழக்கில் சிறை சென்ற ஊழல் குற்றவாளி ஆ.ராசாவிற்கு, ஜெயலலிதாவை விமர்சிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?
ஜெயலலிதா மறையும் பொழுது வழக்கில் இருந்து விடுதலை பெற்று நிரபராதியாக தான் இருந்தார். சட்டப்படி அவர் மீது வழக்கு தொடர முடியாது. ராசாவுடன் விவாதிப்பதற்கு அதிமுகவினர் நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் விவாதிக்க தயாரா? அதேபோல், ஸ்டாலின் இதுபோல் முதலமைச்சர் குறித்து தொடர்ந்து தேவையில்லாமல் பேசிக்கொண்டே இருந்தால், அவரை கோவைக்குள் விட மாட்டோம்.
அதிமுக ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், பிளாட்ஃபாரத்தில் நிற்கும் பொழுது யார் வேண்டுமானாலும் ஏறிக் கொள்ளலாம். திமுகவை வீழ்த்துவதற்கு ரஜினி எங்களுடன் இணைந்தால் அதை ஏற்றுக்கொள்வோம் ” என்றார்.
இதையும் படிங்க: தண்டவாளத்தை சேதப்படுத்திய பாமகவினர் பிணையில் விடுவிப்பு!