கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ஜுனன் இருந்துவருகிறார். இவரது வீடு செல்வபுரம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் அமைந்துள்ளது. இவரது மகள் குடும்பத்தினர் கடந்த மாதம் மதுரைக்குச் சென்று திரும்பியதையடுத்து, வீட்டில் உள்ள ஒன்பது பேருக்கு கடந்த ஜூன் 29ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூவருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து மூவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் அம்மன் அர்ஜுனனுக்கும் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் கடந்த ஜூலை 5ஆம் தேதி இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது பேத்தி சிகிச்சை முடிந்து நேற்று (ஜுலை 8) வீடு திரும்பினார். தற்போது அம்மன் அர்ஜுனன், அவரது மகள், மருமகன் ஆகியோரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறி மருத்துவக் குழுவினருக்கு தனது பாராட்டுகளை அர்ஜுனன் தெரிவித்தார்.
இதையும் படிங்க... ஆளுநர் மாளிகை ஊழியர்களில் மேலும் ஒருவருக்கு கரோனா