கோயம்புத்தூர்: கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கும் பொழுதும், மருந்துகள், தண்ணீர் போன்றவற்றை கொடுக்கும்போதும் அவர்களை தொட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உதவிட கோயம்புத்தூர் காரமடை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் (முக்கூடல் ரோபோட்டிக்ஸ்) ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் நிரஞ்சன், செயலாளர் மணிகண்டன், பள்ளி மாணவர்கள் விஷ்வத், அத்துல் கிருஷ்ணா, நித்தின் ஆகியோர் இந்த ரோபோவை இணைந்து வடிவமைத்துள்ளனர்.
இவற்றின் மூலம் உணவு, நீர், மருந்து ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியும். இதில் தானியங்கி கிருமி நாசினி, தரை சுத்தம் செய்யும் வைப்பர் போன்றவை இணைக்கப்பட்டு உள்ளது. இதனை செல்போன் செயலி மூலமாகவும், அல்லது தானாக இயங்கும் படியும் செய்யலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் நிரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இதனை வடிவமைத்துள்ளோம். இதனை நாங்கள் 5 பேர் சேர்ந்து வடிவமைத்துள்ளோம். இதனை வடிவமைக்க ஒரு மாத காலம் ஆனது. இதன் மூலம் வருங்கால இளைஞர்கள் நவீன தொழில்நுட்பத்தின் மேல் ஆர்வம் கொள்வர்" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய செயலாளர் மணிகண்டன், "இதனை மேலும் புதுப்பிக்கும் பொழுது மருத்துவமனைகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக்ஸிஜன் சப்ளை செய்யவும் பயன்படுத்தலாம். இதனை மருத்துவர்களே கண்காணிக்கும் வண்ணம் வடிவமைக்க முடியும். இதனை அடுத்தகட்ட முயற்சியாக செய்ய இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிலமற்ற மக்கள் மனதில் நிலையாகக் குடி கொண்ட மனிதர் - யார் இந்த உமாநாத்?