சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு, சென்னை திரும்பும் பொதுமக்களால் பெருங்களத்தூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வானங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்தது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் வசிப்பவர்கள், தங்கி பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் என பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடப் படையெடுத்துச் சென்றனர்.
தற்போது விடுமுறை முடிவடையவுள்ள நிலையில், பொங்கல் விடுமுறையை சொந்த ஊரில் கழித்த பொதுமக்கள் மீண்டும் சென்னையில் நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ள பொதுமக்கள் அனைவரும் வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் சென்னையில் நோக்கி வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புண்டு. இதனால் சிலர் முன்கூட்டியே 18ஆம் தேதியோ அல்லது 17ஆம் தேதியோ பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் சென்னையை நோக்கி நேற்று மாலை முதலே வரத் தொடங்கியுள்ளனர்.
தனது சொந்த கார்கள் மூலமாக சென்னை திரும்பும் பொதுமக்கள் பகல் வேளையில் பயணம் செய்ய விரும்புகின்றனர். இதனால் காலையில் தென் மாவட்டங்களில் சென்னையை நோக்கி வரும் மக்கள், மாலை வேலையில் ஒரே நேரத்தில் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் அணிவகுப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இதையும் படிங்க: கவுகாத்தி புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு - சென்னையில் அவரசமாக தரையிறக்கம்!
குறிப்பாக பெருங்களத்தூரிலிருந்து வண்டலூர் இரணியம்மன் கோயில் வரை ஜிஎஸ்டி சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோன்று, தாம்பரம் பேருந்து நிலையத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பெருங்களத்தூர் பகுதியில் தாம்பரம் மார்க்கமாக உள்ள மேம்பாலம் முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதற்கிடையே, ஜிஎஸ்டி சாலைகளில் கனரா வாகனங்களும் வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி ஆமை வேகத்தில் வாகனங்களை இயக்கி சென்றனர். மேலும் பெருங்களத்தூர் - இரும்புலியூர் இடையே உள்ள மேம்பாலப் பணிகள் விரிவாக்கம் செய்யப்படுவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒவ்வொரு வாகனமாக செல்வதால் பல மணி நேரமாக ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சீர் செய்தாலும் கூட, ஒரே நேரத்தில் அதிகப்படியான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.