கோயம்புத்தூர்: சூலூர் கலைமகள் நகரைச் சேர்ந்த 54 வயது நபர். விமானப்படையில் ஏர்மேனாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இவரது மனைவி அரசுப் பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் மாஜி(இடம்) விமானப்படை அலுவலர், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணை: தற்போது 10 வயதான அந்த சிறுமி தனது தந்தை பாலியல் சீண்டல் செய்வதாக பள்ளி ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். இதனையடுத்து ஆசிரியர்கள் கோயம்புத்தூர் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சைல்டு லைன் அமைப்பினர் நேற்று முன்தினம்(ஏப். 30) அந்தப் பெண் குழந்தையிடம் விசாரணை நடத்தியதில், குழந்தை கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மாஜி விமானப்படை அலுவலரை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பெண் குழந்தைக்கு தாய், தந்தை யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையை விலைக்கு வாங்கி வந்ததாகவும் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. குழந்தையை விற்ற கும்பல் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'தரமற்ற ஷவர்மாவால் 16 வயது மாணவி உயிரிழப்பு - மருத்துவமனையில் 18 மாணவர்கள்'