கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள கலங்கல் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் குன்னூரில் வனச்சரகராகப் பணிபுரிந்துவருகிறார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மூத்த மகள் சம்யுக்தா வீட்டில் தனது துப்பட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பட்டா இறுகி சம்யுக்தா மயக்கம் அடைந்துள்ளார்.
இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது சம்யுக்தா ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்யுக்த்தாவின் உடலை உறவினர்கள், பெற்றோர் உடனடியாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த சூலூர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அப்போது சம்யுக்தாவின் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு பாதி புதைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் சம்யுக்தாவின் உடலை மீண்டும் வெளியே எடுத்து உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.