கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை அருகிலுள்ள கண்ணப்பன் நகரில் வசிப்பவர் அப்துல் ரஹீம். 85 வயதான இவர், தையல் இயந்திரத்தில் தனக்கு தேவையான தண்ணீர், மதிய உணவு, நாற்காலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நாள்தோறும் சுமார் 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை பயணிக்கிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக வீடு வீடாகச் சென்று துணிகளை வாங்கி தைத்து கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார்.
அதிகாலை எழுந்து தானே சமைத்து வேலைக்கு புறப்படும் இவர் அந்தி சாயும் பொழுதில் வீடு திரும்புகிறார். மேடு, பள்ளம் என்று பார்க்காமல் இந்த தள்ளாடும் வயதிலும் தன்னுடைய தையல் இயந்திரத்தையும் தள்ளிக்கொண்டு வேலை செய்யும் இவருக்கு ஒருநாள் வருமானம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரைதான்.
தற்போது மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வந்தபோதும், குடியிருப்புகளைத் தேடி தையல் வேலை செய்து வரும் இவரின் செயல் அனைவரின் மனதையும் நெகிழ வைக்கிறது. ஆதரவற்ற இவர் மூன்று வேளை உணவுக்கே சிரமப்படுவதாகவும் முதியோர் பென்ஷன்கூட கிடைக்கவில்லை என்றும் வருந்துகிறார்.
இதுவரை அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில், தன் கையே தனக்குதவி என்பதற்கேற்ப தையல் இயந்திரத்தை தள்ளி தனது வாழ்க்கையை நகர்த்தி வரும் அப்துல் ரஹீம் மீது அரசின் பார்வை எப்போது விழும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: அரசு உதவிக்காக காத்திருக்கும் அகல் விளக்கு தயாரிக்கும் பெண்மணி!