சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர் திருப்பூரில் நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி பணத்தை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.
இதை நம்பிய ஆரோக்கியராஜ் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அம்பராம்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள இருவர் தங்கக் கட்டிகளை காட்டி பணத்தை வாங்கிய பொழுது திடீரென காவல்துறையினர் எனக் கூறி ஒரு கும்பல் தங்கத்தையும், பணத்தையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து உள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆரோக்கியராஜ் சத்தம் போட்டதால் அங்குள்ள பொதுமக்கள் பார்த்தசாரதியை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஆனைமலை காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மேலும் ஏழு பேருக்கு இதில் தொடர்புள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஏழு பேரையும் ஆனைமலை காவலர்கள் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பதி கோவிலில் காவலாளி பணி பெற்றுத் தருவதாக ராணுவ வீரரிடம் ரூ. 80 லட்சம் மோசடி