கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கம்.
இவரது வீட்டில் கடந்த 15ஆம் தேதி சொகுசு காரில் வந்த நபர்கள் வருமான வரி அலுவலர்கள் போல் நடித்து வீட்டில் இருந்த ரூ. 20 லட்சம் பணம் காசோலைகள், ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பஞ்சலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜனவரி 20ஆம் தேதி மாலை கோயம்புத்தூர் ஈச்சனாரி புறவழிச்சாலை பகுதியில் தனிப்படை காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அந்தக் காரில் இருந்தவர்கள், கிணத்துக்கடவில் கல் குவாரி உரிமையாளர் வீட்டில் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் வந்த சங்கனூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (36), சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37), கணபதி பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (30) ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்கள் வைத்திருந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் பணத்தைக் கொள்ளையடிக்க உதவியாக இருந்த கிணத்துக்கடவு மதுரைவீரன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ் (36), பேரூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (47), பகவதி பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (47), காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (42) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். இந்தக் கொள்ளை வழக்கில், வருமான வரித்துறை அலுவலர் போல் நடித்த முக்கிய குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மேத்யூ (60), காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பைசல் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை தனிப்படை காவலர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல்