கோயம்புத்தூர்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 42ஆவது பட்டமளிப்பு விழாவில், வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு கல்லூரியில் (UG, PG, PhD, ODL) முடித்த 2602 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. இதில் 88 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.
பின்னர் சிறப்புரையாற்றிய ஆளுநர், "பட்டம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு பின்புதான் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. பசுமைப் புரட்சியின் மூலமாக விவசாய வளங்கள் மீட்டெடுக்கப்பட்டது.
இப்பொழுது நாம் பிற நாடுகளில் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளார். ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் நேரடியாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப் படுகிறது.
இந்தியாவில் உணவு உற்பத்தி, தேவைக்கு அதிகமாக உள்ளது. இதனை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் பலப்படுத்தலாம். விவசாயிகளின் நன்மைக்காகவே பல்வேறு ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பங்களை வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.
இதுவரை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இளங்கலைப் பட்டமும், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முதுகலை பட்டமும், 3500க்கும் மேற்பட்டவர்கள் ஆராய்ச்சி பட்டமும் பெற்றுள்ளனர்.
இவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள். வேளாண் கல்வியைப் பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை பாதிக்கக் கூடிய இயற்கைப் பேரிடர்களை சமாளிக்கும் அளவு, புதிய நவீன யுக்திகளை நாம் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஜெய்பீம்' ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம் - சூர்யாவுக்கு ஸ்டாலின் பாராட்டு