RATION RICE SEIZED: கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் - சிந்தாமணிப்புதூர் டோல்கேட் பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த லாரியை மடக்கியுள்ளனர்.
பின்னர் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், எந்தப் பகுதியிலிருந்து லாரி வருகிறது என விசாரித்தனர். பிறகு அந்த குடோனுக்குச் சென்று பார்த்தபோது, அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த சூலூர் ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் குடோனில் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசியைப் பதுக்கி கேரளாவுக்குக் கடத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து கேரளாவுக்குச் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்த 37 டன் அரிசியையும் குடோனில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பருப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் ராசா மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் ராஜபட்டாணி ஆகியோரைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமறைவான குடோன் உரிமையாளர் கோவிந்தராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி