கோவை: தமிழ்நாடு பட்ஜெட் இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வனத்துறைக்குப் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், வன ஆணையம் அமைக்கவும், மாநில விலங்கான அழிந்து வரும் பட்டியலில் உள்ள நீலகிரி வரையாடுகளைப் பாதுகாக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த இரண்டு திட்டங்களுக்கும் சூழலியல் ஆர்வலர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
இதுகுறித்து ஓசை அமைப்பின் தலைவர், காளிதாசன் கூறுகையில், 'நீலகிரி வரையாடுகளைக் காப்பாற்றத் தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது என்பது மிகுந்த மகிழ்ச்சி வரவேற்புக்குரியது. தமிழ்நாடு - கேரளா மலைப்பகுதியைத் தவிர, உலகில் வேறு எங்கும் இந்த வரையாடுகள் கிடையாது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளது.
நீலகிரி வரையாடுகள்
பாலக்காட்டுக் கணவாய் பகுதியில் மட்டுமே வரையாடுகள் வாழ்கின்றன. அழிந்து வரும் உயிரினங்களில் நீலகிரி வரையாடுகளைப் பாதுகாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சரியான நோக்கத்தில், அந்த நிதியை செலவிட வேண்டும். வரையாடுகள் முன்பு வாழ்ந்த இடங்களில், தற்போது இல்லை. அவை வாழ்கின்ற இடங்களில் அந்நிய களைச்செடிகள் பரவியிருக்கின்றன. அந்த அந்நிய செடிகளால் வரையாடுகளுக்குப் பாதிப்பாக உள்ளது. அவற்றைக் களைவதற்கு நிதியைப் பயன்படுத்த வேண்டும். வரையாடுகள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிய வகை உயிரினம்
அவற்றை மற்ற வரையாடுகளோடு இணைக்க வழியை ஏற்படுத்தவேண்டும். வால்பாறை சாலையில் காணப்படும் வரையாடுகளைப் பொதுமக்கள் துன்புறுத்துகின்றனர். அதனைப் பொதுமக்கள் பார்த்து அரிய வகை உயிரினம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், வனத்துறையின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். வரையாடுகள் வாழ்கின்ற இடங்களான தமிழ்நாடு - கேரள எல்லையில் வேட்டைக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
எனவே, அதனைக் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்யும் போது வரையாடுகள் காப்பாற்றப்படுகிற இந்த முயற்சி முக்கியத்துவம் வாய்ந்தது.
உயிர்ச்சூழலில் முக்கியமான பகுதியான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அறிய வகை குறியீடாக இவை உள்ளது. காப்பாற்றப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் வரையாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆனைமலைப் புலிகள் காப்பகம், கேரளாவில் மூணாறு பகுதிகளில் 2000 முதல் 3000 வரை மட்டுமே வரையாடுகள் உள்ளன. இது எண்ணிக்கையளவில் குறைவு. இதை அதிகப்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.
"பிராஜெக்ட் வரையாடு" திட்டம்
இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில் ' "பிராஜெக்ட் டைகர்", "பிராஜெக்ட் எலீஃபென்ட்" என்ற வரிசையில் "பிராஜெக்ட் வரையாடு" (Project of Nilgiri tahr) என்ற திட்டத்தின்கீழ், அரசின் இந்த நிதி செலவிடப்பட உள்ளது. மேலும், அத்துடன் கோவையை தலைமையிடமாகக் கொண்டு, இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டு வரையாடுகளைப் பாதுகாக்க ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவிடுவோம்' எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'வரையாடு இருக்குமிடம் புல்வெளி நிறைந்த இடமாகவும், புல் மலையைப் பாதுகாக்கவும் அதன் தன்மை மாறாமல் இருக்க வரையாடுகள் அவசியம். மலைப்பகுதி செழிப்பான பகுதியாக இருக்க வரையாடுகள் தேவை' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல்... 24ஆம் தேதி வரை சட்டபேரவைக் கூட்டம் - சபாநாயகர் அறிவிப்பு