சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பற்றி விமர்சனம் செய்ததற்காக, சமூக வலைதள விமர்சகர் கிஷோர் கே. சுவாமி மீது சங்கர் நகர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் என்பவர் புகார் செய்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கிஷோரை கடந்த ஜூன் மாதம் கைதுசெய்தனர்.
இந்நிலையில், அவர் மீதான பழைய வழக்குகளிலும் கிஷோரை கைதுசெய்த காவல் துறையினர், அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். அந்த வகையில், அவர் மீதான ஏழு வழக்குகளில் காவல் துறையினர் கைது நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதையடுத்து, கிஷோர் கே. சுவாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் துறை ஆணையர் கடந்த ஜூன் 25ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி அவரது தந்தை கிருஷ்ணசுவாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்செய்தார்.
ரத்துசெய்யப்பட்ட குண்டர் சட்டம்
இந்த மனுவை நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பாயிண்ட் பாலாஜி ஆஜராகி வாதம்செய்தார். இதையடுத்து, கிஷோர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்துசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வழக்கறிஞரின் செயலால் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினேன் - நீதிபதி வேதனை