"இளைஞர்களின் எழுச்சியே இந்தியா நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்" என்ற அப்துல் கலாமின் கருத்து மிகவும் பிரபலமானது. இளைஞர்கள் என்றால் சமூக வலைத்தளங்களில் வெற்று கருத்தைத் தெரிவித்து நேரத்தை வீணடிப்பவர்கள் என்ற பிம்பத்தை 2015 சென்னை வெள்ளமும் 2017 ஜல்லிக்கட்டு போராட்டமும் சுக்குநூறாக உடைத்தன.
சமூக வலைத்தளத்தை இதுபோன்ற ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதை உலகிற்கு இளைஞர்கள் உணர்த்தினர். ஒவ்வொரு நெருக்கடியான நேரத்திலும் சமுகத்திற்கு இளைஞர்கள் ஆற்றும் சேவை என்பது அப்துல் கலாம் போன்ற அறிஞர்களின் கருத்திற்கு வலு சேர்க்கிறது என்றே கூறவேண்டும்.
தற்போது கரோனா வைரசுடன் நடக்கும் யுத்தத்திலும் இளைஞர்கள் பலர் தங்கள் பங்கிற்கு உதவி செய்துவருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் தினசரி கூலித் தொழிலாளர்களும் மாற்றுத் திறனாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் நோக்கில் சென்னை கிறுத்துவக் கல்லூரி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் படித்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், "சென்னை கரோனா வாரியர்ஸ்" என்ற குழுவை அமைத்துள்ளனர். இவர்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து அத்தியாவசியப் பொருள்களை நேரிலேயே சென்று வழங்கி உதவுகின்றனர்.
இது குறித்துப் பேசிய சென்னை கரோனா வாரியர்ஸ் நிறுவனர் அருண் பாஸ்கர், "மத்திய மாநில அரசுகள் பல நிதி, நிவாரண உதவிகள் வழங்கினாலும் அதில் சில குடும்பங்கள் விடுபட்டுப்போக வாய்ப்புள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலே இந்த குழு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் குழுவிற்கு வரும் நன்கொடைகள் எப்படிச் செலவிடப்படுகிறது என்பதைக் கூகுள் ஸ்பிரெட் ஷீட்டில் அனைவரும் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு நன்கொடையும் எப்படி மக்களுக்குச் சென்றடைகிறது என்பதை வெளிப்படையாக அனைவரும் பார்க்கமுடியும்.
அதேபோல சென்னை மாநகராட்சியும் எங்கள் தன்னார்வ உறுப்பினர்களும் உதவி தேவைப்படும் குடும்பங்களைக் கண்டறிகிறார்கள். அவர்களுக்கு நேரிலேயே சென்றுப் பொருள்களை வழங்குவதால் தேவையானவர்களுக்குப் பொருள்கள் சென்றடைகிறது என்ற திருப்தியும் எங்களுக்குக் கிடைக்கிறது” என்றார்
மேலும், இந்த அமைப்பில் சேர்ந்து தன்னார்வ தொண்டு செய்ய விரும்புபவர்கள், 9940402225 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம்.
இது போன்ற இளைஞர்களின் முயற்சிகள், கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடப் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை.