சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில், வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (ஜூன் 1) காலை ஹைதரபாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த சிறப்பு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரை பிடித்து சோதனை செய்தனர். அவரின் இடுப்பு பகுதியில், ரூ.28 லட்ச ரூபாய் பணத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், பணத்தை கைப்பற்றி, அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த வாலிபர், ஆந்திரா குண்டூரைச் சேர்ந்த கோணகண்டியா சந்திரசேகர் (21) என்பது தெரியவந்தது.
அவரிடம் பணத்திற்கான தகுந்த ஆவணங்கள் இல்லாததால், அதனைப் பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த பணம் ஹவாலா பணமா என வருமான வரித்துறையினர் கோணகண்டியாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில் மூலம் மதுபானங்கள் கடத்தல் - 42 பேர் கைது