சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடைபெறும் என தமிழ்நாடு உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பருவத்தேர்வுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வுகளை எழுத உள்ளனர்.
ஆன்லைன் தேர்வுகளை எழுத கூடிய மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதவும் உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்கள் மற்றும் இமெயில் ஐடி , செல்போன் எண் போன்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் கல்லூரிகளின் நிர்வாகத்தினர் அதனை உறுதிசெய்ய வேண்டும். மேலும் கல்லூரியில் இருந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தினைத் தொடர்புகொண்டு மாணவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாவிட்டால் மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.
விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது
தேர்வு நேரம்
தேர்வுகள் காலையில் 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலையில் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். தேர்வு முடிந்த அடுத்த 1 மணி நேரத்தில் விடைத்தாள்களை மின்னஞ்சல்,வாட்ஸ்அப் போன்றவற்றின் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவற்றைத் தேர்வுக்குரிய பாடங்களுக்கான பேராசியர்கள் கண்காணித்து விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்யச்சொல்லி பெறுவர்.
அதேபோன்று மாணவர்கள் எழுதிய தேர்வுக்குரிய விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த 1 வார காலத்திற்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பத்தவறினால் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.
மேலும் மாணவர்கள் மின்னஞ்சல், வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பிய விடைத்தாள்களும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
மேலும் மாணவர்கள் தங்களின் விவரங்களையும், வருகைப் பதிவினையும் https://student_attdetails.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பழுதடைந்த மின்மாற்றிகள் மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி - களத்தில் இருப்பதோ வேற நிலை..!