சென்னை: திருவொற்றியூர் கிராம தெரு அரிவாகுளம் பகுதியில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், இடிந்து விழுந்த கட்டடத்தின் மற்றொரு பகுதி பாதுகாப்பின் காரணமாக இடிக்கப்பட்டது. மேலும், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடிந்து விழுந்த கட்டடத்தின் தரம் குறித்தும், குடியிருப்பு பகுதியின் மண் வளம் மற்றும் மற்ற கட்டடங்களின் தரம் குறித்தும் வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இடிந்த கட்டடத்தின் அனைத்து கட்டட கழிவுகளும் அகற்றப்பட்ட நிலையில் கட்டடத்தின் அடித்தளத்திலும் வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் அங்கு உள்ள கட்டடங்கள் அனைத்தும் சிதிலமடைந்து உள்ளன.
இது குறித்து சமூக சேவகரும், தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்கத்தின் உறுப்பினருமான பூபாலன், ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக கூறியிருப்பதாவது,
மாற்று ஏற்பாடாக அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்
”கடந்த 1970 மற்றும் 80ஆம் ஆண்டுகளில் வடசென்னை பகுதியில் அதிகளவில் குடிசை வீடுகள் இருந்தன. இந்தக் குடிசை வீடுகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைவதை தடுப்பதற்காக, தீ விபத்தில் சிக்கிய வீடுகளில் இருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அப்போது வீட்டில் வசிப்பவர்களுக்கு ரூ. 25 வாடகையாக வசூலிக்கப்பட்டது.
1988 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டப்பட்ட பல கட்டடங்கள் பராமரிப்பில்லாமல் இருந்து வருகின்றன. அரசாங்கத்தால் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் குடியிருப்புகள் என்பதால் இங்கு முறையாக பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதில்லை. மேலும், வருமானம் இல்லாததால் பராமரிப்பு தவிர்க்கப்படுகிறது.
பராமரிப்பின்றி இருக்கும் கட்டடங்கள்
குடியிருப்பின் பராமரிப்பில் ஈடுபடும் தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் வாடகை வசூலிக்கும் பிரிவினர் ஆகியோரிடம் சென்று கேட்டால் பராமரிப்பிற்கு சரியாக பணம் கொடுக்கப்படவில்லை என இரு தரப்பினரும் கூறி பராமரிப்பினை தவிர்க்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 40 ஆண்டுகள் பழைமையான கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பல இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன.
அதன் பிறகு 2004ஆம் ஆண்டு, சுனாமிக்கு பிறகு 2004 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்கள் முறையான பராமரிப்பின்றி இருந்து வருகின்றன.
வாடகை வசூலித்தும் பராமரிக்கப்படவில்லை
குறிப்பாக, கொருக்குப்பேட்டை அரங்கநாதன் நகர் குடியிருப்பு, தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் குடியிருப்பு, 2000ஆவது ஆண்டு கட்டப்பட்ட தண்டையார்பேட்டை குடியிருப்பு, இளைய முதலி தெருவில் உள்ள குடியிருப்பு ஆகிய குடியிருப்புகள் முறையான பராமரிப்பின்றி உள்ளன.
அவ்வாறு கட்டப்பட்ட வீடுகளில் 2014ஆம் ஆண்டு ரூ.500 வாடகை வசூலிக்கப்பட்டு அதில் ரூ.250 பராமரிப்பிற்கும், ரூ.250 வாடகைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளில் வாடகை வசூல் செய்யப்பட்டும் முறையான பராமரிப்பு ஏதும் செய்யப்படவில்லை. மேலும், குடியிருப்புகளில் இருக்கும் மோட்டார் பம்புகள் சரிவர பராமரிப்பு செய்யப்படவில்லை.
நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள்
கட்டடம் சிதிலமடைவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் குழாய் மற்றும் மழை நீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட நீர் கசிவால் கசிந்து வெளியேறும் நீர் நேரடியாக சுவரில் பரவி கட்டடத்தை சிதிலமடைய செய்கின்றன. இதனால் கட்டடங்களில் விரிசல் ஏற்படுகிறது. கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடியிருப்பில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடிகளில், சுவரில் வளரும் மரத்தின் வேர், கட்டடத்தின் அடிவரை சென்று கட்டடம் இடிவதற்குக் காரணமாக அமைகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட குடியிருப்புகளுக்கான பராமரிப்புத்துறை இயங்குகிறதா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.
நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் குடிசை மாற்று வாரிய பொது நல சங்கம் என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தி தண்ணீர், சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது, படிகளில் மின்விளக்கு போடுவது போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் நாங்களே பூர்த்தி செய்து கொள்கிறோம்.
கேள்விக்குறியான கட்டட பராமரிப்பு
தற்போது எல்ஐசி கட்டடத்திற்கு நிகராக 15 மாடிகள் கொண்ட கட்டடம் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெருவில் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்தக் கட்டடம் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்தக் கட்டடத்தில் மழை நீர் சேமிப்பு முறையாக உள்ளதா? மோட்டார் பம்புகள் முறையாக உள்ளதா? மற்றும் லிப்ட் வசதிகள் முறையாக உள்ளதா? என எதுவும் தெரியாமல் மக்கள் குடி அமர்த்தப்படுகிறார்கள். உயர்ந்த மாடியில் வசிப்பவர்கள் அவசர தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலையில் பராமரிப்பு இருந்து வருகிறது.
தற்போது குடியிருப்பில் புதிய அம்சமாக சுயநிதி திட்டம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு மானியத்துடன் வீடு வழங்கப்படுகிறது. மேலும், மீத தொகை வாடகையாக வசூலிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டு ஆவணம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆவணம் வழங்கியபின் குடியிருப்பின் பராமரிப்பு யாரை சேரும் என்பதை இதுவரை எந்த ஒரு அலுவலரும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறவில்லை. தொடர்ந்து குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் பராமரிப்பு நிலை கேள்விக்குறியாகவே உள்ளது” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா - ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டும் நெறிமுறைகள்