சென்னை: இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் உலக அளவிலான சர்வதேச கிக் பாக்சிங் போட்டிகள் நடந்தன. இந்தப்போட்டிகளில் இந்திய அணி சார்பில் 36 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனா். இந்த அணியில் தமிழ்நாட்டைச்சோ்ந்த வசீகரன் பாலு(18), நிவேதா(14), சுா்பர்ஜா(17) ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இவர்களில் வசீகரன் பாலு வெண்கலப்பதக்கம் பெற்று சாதனைப் படைத்தார்.
போட்டியில் வென்ற வசீகரன் பாலு உட்பட தமிழ்நாட்டு வீரர்கள் இத்தாலியில் இருந்து மும்பை வழியாக விமானத்தில் இன்று (அக்.11) சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் வெண்கலப்பதக்கம் பெற்று வந்த வசீகரன் பாலு, நிவேதா, சுர்பர்ஜா, பயிற்சியாளர் சுரேஷ்பாபு ஆகியோருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெண்கலப்பதக்கம் பெற்ற வசீகரன் பாலு கூறுகையில், 'உலக கிக் பாக்சிங் போட்டியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த 4 மாதங்களாக கடுமையான பயிற்சி பெற்றேன். அடுத்து வரும் உலகப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற வேண்டும் என முயற்சி செய்வேன்' என்றார்.
இந்திய அணி பயிற்சியாளர் சுரேஷ்பாபு கூறுகையில், 'உலக கிக் பாக்சிங் போட்டியில் 63 நாடுகளில் இருந்து 2,545 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர் வசீகரன் பாலு, வெண்கலப்பதக்கம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. கிக் பாக்சிங் போட்டிக்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் தந்து ஊக்கப்படுத்தியது. இந்திய அணி 1 வெள்ளிப்பதக்கமும் 9 வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 3 வீரர்கள் பங்கேற்றனர். வருங்காலத்தில் அதிகமான வீரர்கள் பங்கேற்பார்கள்' என்றார்.
இதையும் படிங்க: 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டி - நீச்சலில் தங்கம் வென்ற கர்நாடக சிறுமி