சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சின்னம்மா அணி என்றும், சசிகலா சிறை சென்ற பிறகு, அது ஓபிஎஸ் - இபிஎஸ் அணியாக மாறி நின்றது. பல்வேறு தரப்பு முயற்சிகளால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றும், ஆட்சியில், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்ற சமரசத்தோடு ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைத்து வைக்கப்பட்டன.
சமீபத்தில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த முடிவில் அதிமுகவில் மீண்டும் சர்ச்சையும், கோஷ்டியும் உருவானது. செயற்குழுக்கூட்டத்தில் கட்சியில் இன்னும் வழிகாட்டு குழு அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஓபிஎஸ் முன்வைத்தார். இந்த நிலையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்டபாளர் குறித்த முக்கிய முடிவு இன்று (அக்.7) அதிமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சியின் முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கட்சியை வழிநடத்த, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு குழுவில், பெண்கள், முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்குவதாக சொல்லிக் கொள்பவர்கள், கட்சியில் அவரது கொள்கையை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். ஜெயலலிதா தனது கட்சியில் உள்ள பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார். ஆட்சியிலும், கட்சியிலும் பெண்களுக்கு என தனி 'கோட்டா' வைத்திருந்தார். அவரை மானசீக வழிகாட்டியாக கொண்டு செயல்படுவதாக சொல்லிக் கொள்ளும் தற்போதைய அதிமுகவின் வழிகாட்டு குழுவில் ஒரு பெண்கள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களில் சரோஜா, வளர்மதி, நிலோபர் கபில், முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி, கோகுல இந்திரா, ஆகியோர் இருக்கும் நிலையில், அதிமுக வழிகாட்டு குழுவில், பெண்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் மகளிர் அணியினர் தங்களுக்குப் பேசி வருகின்றனர்.
வழிகாட்டு குழுவில், வன்னிய, முக்குலத்தோர், கொங்கு வேளாளர், மீனவர், கிறிஸ்துவ வன்னியர், நாடார், பிள்ளைமார், தேவேந்திரகுல வேளாளர், யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள், முஸ்லிம்கள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும் போது, அதிமுக சாதி, மதம் அடிப்படையில் இல்லாமல் அனைத்து மக்களுக்குமான இயக்கமாக அது இருந்திருக்கிறது. தற்போது பிற சாதிக் கட்சிகள் போல செயல்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மக்களை என்றுமே சாதி, மதம் ரீதியாக அணுகியது இல்லை. அப்படி அணுகியிருந்தால் அவர்கள் முதல்வராகியிருக்கமாட்டார்கள். சாதி, மத ரீதியாக இயங்கும் கட்சிகளுக்கு மக்கள் ஆட்சியை தந்ததில்லை என்ற வரலாறு தமிழகத்திற்கு உண்டு.
இதையும் படிங்க : நூறாண்டு காலம் அதிமுகவை வெற்றி இயக்கமாக உருவாக்கிட உழைப்பேன் - முதலமைச்சர்!