சென்னை: மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ராணி, உஷா. இவர்கள், மாடம்பாக்கம், மேடவாக்கம், வேளச்சேரி,
சைதாப்பேட்டை, வந்தவாசி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து மகளிர் குழுவில் இனைந்துள்ள பெண்களிடம் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வாங்கித் தருவதாகவும், அதற்கு முன் தொகையாக ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரண்டு அல்லது மூன்று நாள்களில் கூறிய தொகையினை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர். இதில், ஒரு சிலரிடம் நகை பெற்று கூடுதலாக நகை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய 200க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை செலுத்தியுள்ளனர்.
சினிமா பட பாணியில் ஏமாற்றிய பெண்கள்
இதனையடுத்து, பணம் கொடுத்து ஓராண்டு கடந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் உஷா, ராணி இருவரிடமும் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது, இருவரும் தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை தருவதாக சிலரிடம் கூறியுள்ளனர்.
மேலும், சில பெண்களிடம் வீட்டின் பின்புறம் புதையல் இருப்பதாகவும், அதனை எடுத்த சில நாள்களில் தருவதாகவும், ஒரு சிலரை சாமியார்களிடம் கூட்டிச் சென்று அம்மன் அருள்வாக்கு கொடுத்தால் தான் பணத்தை திருப்பித் தர முடியும் என்றும் கூறி சினிமா பட பாணியில் நூதன முறையில் ஏமாற்றி வந்துள்ளனர்.
ஆனால், பணத்தைக் கொடுத்தவர்கள் மீண்டும் மீண்டும் வரத் தொடங்கியதால், ராணியும், உஷாவும் வசித்து வந்த வீட்டினை காலி செய்துவிட்டு பணம், நகைகளுடன் மாயமாகியுள்ளனர்.
காவல் நிலையம் முற்றுகை
இதனையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்கள் அவர்கள் இருவரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், சேலையூர் அருகேவுள்ள மாடம்பாக்கத்தில் ராணி தங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு சென்று மறைந்திருந்த ராணியைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள உஷாவினைக் கைது செய்து தங்களின் பணம், நகைகளை மீட்டு தரக் கோரி சேலையூர் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: திருமண இணையதளம் மூலம் மோசடி செய்த பெண் கைது