சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவக் குழுவினருடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், கரோனா தொற்று குறைந்துள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே மாதத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மு.க. ஸ்டாலின் ஆலோசனை
தொடர்ந்து தொற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது, தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் எனத் தெரியவருகிறது. அந்த வகையில் தற்போது கட்டுப்பாடுகள் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள், ஜவுளிக் கடைகள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்டவை அனுமதிக்கப்படும் என்று தெரியவருகிறது.
11 மாவட்டங்கள்
மேலே குறிப்பிட்ட கட்டுப்பாடுள்ள மாவட்டங்கள் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவை ஆகும். இந்த மாவட்டங்களில், நோய்த் தொற்று கட்டுக்குள் வந்திருந்தாலும், அங்கு பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அங்கு, அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையும் படிங்க : 'மருத்துவர்கள் நலன் காக்கும் அரசு' - முதலமைச்சர் ஸ்டாலின்