சென்னை எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அக்கோயிலுக்கு சொந்தமான 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததை நேரில் ஆய்வு செய்து மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் "அன்னைத் தமிழில் அர்ச்சனை" என்ற அடிப்படையில் முதலமைச்சர் நேற்று பதாகைகளை வெளியிட்டார். முறையான பயிற்சி பெற்றவர்களை கொண்டு இனி தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை முறைப்படி தொடங்கப்படவுள்ளது.
எழும்பூரில் உள்ள சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுத்தமாக இல்லாததையும் அதை முறையாக சுத்தப்படுத்தி நந்தனம் அமைத்து பராமரிக்க உத்தரவிட்டுள்ளேன். எழும்பூர் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 50,000 சதுர அடி இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மீட்கப்பட்டுள்ளது.
அறநிலையத் துறையின் மூலம் கல்லூரிகள் கட்ட முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். சென்னையில் கூடிய விரைவில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கல்லூரி அமைக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு கோயிலுக்கு வருமானம் வரும் வகையில் வணிக வளாகங்கள் மற்றும் தேவையான இடங்களில் கல்லூரிகளும் கட்டுவதற்கு அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.
காணாமல் போன சிலைகள் மற்றும் சில கோயில்களில் உள்ள சிலைகளை வீட்டில் கொண்டு போய் வைத்து பூஜை செய்து வருகிறார்கள், அப்படிப்பட்ட சிலைகளை எல்லாம் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருடு போன சிலைகளை கண்டுபிடிப்பதில் அறநிலையத் துறை தீவிரமாக களமிறங்கியுள்ளது" என்றார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது தேவையான சட்டப்போராட்டம் நடத்தி முதலமைச்சர் தேவையான நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் அரசாணை