சென்னை: இயற்கைச் சமநிலையை வனவிலங்கு பாதுகாப்பு என்பது அவசியமானது. ஆனால், தமிழ்நாட்டின் இன்றைய சூழலில், வன விலங்குகளை வேட்டையாடுவதும், மனித - விலங்கின மோதல் என்பதும் சாதாரண நிகழ்வாக உள்ளது.
விவசாயிகள் தங்களின் பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க விஷம் வைத்தல், வலைப்பொறி மற்றும் சுடுதல் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனால், விலங்குகள் பெருமளவில் அழிக்கப்பட்டு இயற்கைச் சமநிலை சீரழிந்து வருகிறது என்றே சொல்லலாம்.
சமீப காலமாக யானைகள், சிறுத்தைகள், சிங்கங்கள், மான்கள், குரங்குகள், பறவைகள் மற்றும் காட்டு நாய்கள் பெருமளவில் காப்பு காடுகளில் (Reserve Forests) கொல்லப்படுகின்றன. இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், விலங்குப் பொருள்களான தந்தம், தோல், இறைச்சி, பற்கள், தேன், அரக்கு, பட்டு போன்றவற்றை விற்பனை செய்வதற்காக விலங்குகள் வேட்டையாடப்படுகிறது. இது அதிகாரிகளின் அலட்சியப்போக்கே என்று சொல்கின்ற இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகளுக்கு போதுமான வனவிலங்குகள் பற்றி போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும், நீலகிரியில் உள்ள காப்புக் காடுகளில் பக்கத்தில் வசிக்கும் விவசாயிகள் வைத்த வலைப்பொறிகள், நஞ்சுகள் மூலம் 9 சிறுத்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. மேலும், இதேபோல, கோயம்புத்தூர், நீலகிரி வனப்பகுதிகளில் 29 யானைகள் 2020ஆம் ஆண்டு வேட்டையாடுதல், துப்பாக்கிச் சூட்டில் உயிழந்துள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்தில் 2 புலிகள், 5 காட்டு நாய்கள், 1 காட்டெருமை ஆகியன நஞ்சு வைத்து கொல்லப்பட்டுள்ளன என்கிறது அரசின் புள்ளி விவரங்கள்.
இது தொடர்பாக திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியல் உதவிப்பேராசிரியரும், வன விலங்கு ஆராய்ச்சியாளருமான கொ. அசோகச் சக்கரவர்த்தி பேசும்போது, 'மனித-விலங்கின மோதல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து கொண்டே போனால், மனித இனமும், விலங்கினமும் அழியக்கூடும் நிலை ஏற்படும். மனிதர்கள், விலங்குகள் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாலேயே, இந்த நிலைமை ஏற்படுகிறது. குறிப்பாக, யானைகள் அவைகளின் வாழ்விடத்தை இழந்து, மனிதர்கள் வாழும் இடத்துக்கு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதே போல, பறவைகளும் வேட்டையாடப்படுகின்றன," என்று தெரிவித்தார்.
'விலங்குகளின் இறப்பு காப்புக்காட்டுகளில் அதிகரித்துள்ளது. இது, அலுவலர்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது. அலுவலர்கள் குற்றவாளிகளைக் கைது செய்தாலும், எவ்வித முன்னேற்றமும் இல்லை' என்று தெரிவித்தார்.
முறையாகப் பின்பற்றப்படுகிறதா வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்? சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய நாடாளுமன்றத்தில் வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972 நிறைவேற்றப்பட்டது. எனினும், இச்சட்டத்தில் இதுவரை ஏழு முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி, வன உயிர்களான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியவற்றை பாதுகாக்கின்றது. உயிரினங்களை வேட்டையாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை இச்சட்டம் வலியுறுத்தி, காட்டு விலங்குகள், பறவைகள், தாவரங்களுக்கு இச்சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது.
இது குறித்து வனவிலங்கு செயற்பாட்டாளர் எஸ். முரளிதரன் பேசுகையில், 'இந்தச் சட்டம் 1972ஆம் ஆண்டு, இயற்றப்பட்டாலும், அப்போதைய நிலை வேறு. இன்றைய நிலை வேறு. இந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஏனெனில், விலங்குகள் கொல்லப்படுவதற்கு வனத்துறையினரே காரணமாக இருக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு யானைகள் உயிரிழந்துள்ளன. தமிழ்நாட்டில், சுமார் 2 ஆயிரத்து 760 யானைகள் பல்வேறு காப்பு காட்டுப் பகுதிகளில் வாழ்கின்றன,' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'இதே நிலை நீடித்தால் உயிர்களின் சமநிலை பாதிக்கப்படும். கடந்த சில வருடங்களுக்கு முன், ஒரு ஆண் யானைக்கு 10 அல்லது 20 பெண் யானைகள் விகிதம் இருந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி, அது ஒரு ஆண் யானைக்கு 30 அல்லது 40 பெண் யானைகள் என்று அதிகரித்துள்ளது' என்றார்.
இது குறித்து நம்மிடம் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பேசியபோது, 'யானைகள், புலிகள், சிறுத்தைகள் இறப்புகள் குறித்து விசாரணை நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு(ஜன.20), நீலகிரியில் உள்ள மசினக்குடி வனப்பகுதியின் அருகேயுள்ள வீட்டில் நுழைந்த காட்டு யானையின் மீது எரியும் டயரை வீசியதில், அதன் காது அறுந்து விழுந்து, அடுத்த நாள் உயிரிழந்தது நினைவுக்கூரத்தக்கது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜன.14ஆம் தேதியன்று தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற யானை ஒன்று கன்டெய்னர் லாரி மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.