சென்னை: கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.25) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், உயர் கல்வி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து, காட்டு யானைகளின் தாக்குதலால் வீடுகள் சேதமடைவது குறித்து கூடலூர், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.ஜெயசீலன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், “நான் சார்ந்துள்ள கூடலூரில் ஒரு தாய் யானையாலும் அதன் குட்டி யானையாலும் அப்பகுதி மக்கள் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. பயிர்களும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளுக்கு வந்துள்ள யானைகளை வேறு வனப் பகுதிகளுக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி சேதமடையும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் “யானைகளை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோவாலா, அந்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், கும்கி யானை கொண்டும், பணியாளர்கள் மூலம் மிளகாய் பொடி, மிளகுப் பொடி கொண்டும் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ட்ரோன் மூலமாகவும், வேட்டை தடுப்புக் குழு மூலமாகவும் முகாமிட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்