சென்னை அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த பிரவீனா என்பவர், கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, அவருடன் படித்த அஜித் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த நபரை காதலித்துள்ளார்.
அப்போது, அஜித்தின் அறிவுறுத்தல்படி, திருமணத்திற்காக பிரவீனா கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமணம் இந்து முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீனா மற்றும் அவரது பெற்றோர், இதுகுறித்து அஜித்திடம் கேட்டபோது, விருப்பம் இருந்தால் திருமணம் செய்து கொள், இல்லை என்றால் கிளம்பி விடு என்று கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து வேறு வழியின்றி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரவீனா, அஜித்தின் வீட்டிற்கு சென்ற இரண்டாவது நாளே, அவரை கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற்ற முயற்சி செய்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் தனக்கு என்ன நடந்தாலும், அதற்கு அஜித்தும், அவரது குடும்பத்தாரும் பொறுப்பாக மாட்டார்கள் என, பிரவீனாவிடம் பத்திரத்தில் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
பிறகு கணவர் அஜித்தும், அவரது குடும்பத்தாரும் 5 லட்சம் ரூபாய் பணம், இருசக்கர வாகனம் மற்றும் நகைகளை போடுமாறு கேட்டு, பலமுறை பிரவீனாவை தாக்கியுள்ளனர். இரண்டுமுறை கருத்தரித்த போதும், அவர்கள் தாக்கியதில் பிரவீனாவிற்கு கருக்கலைப்பு ஆனதாக தெரிகிறது.
இது குறித்து கடந்த மாதம் மூன்றாம் தேதி பிரவீனா அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோதும், அவர்கள் புகாரை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் கவுன்சிலிங் அனுப்பப்பட்ட போதும், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இதனால், இன்று காலை மீண்டும் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற பிரவீனா, தனது கணவர் வரதட்சனை கேட்டதாகவும், அவர் தாக்கியதில் கருக்கலைப்பு நடந்ததாகவும் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார்.
பிரவீனா வெளியில் செல்லும்போது, கணவர் அவரை பின்தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.