சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து மூடப்பட்டுள்ளன.
இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக தமிழ் திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
பல முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி வசம் சென்றதால், திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்ற மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் படங்களை திரையிட்டு வருகின்றன.
அதேபோல், தமிழ்நாட்டிலும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன், மா. சுப்பிரமணியன் ஆகியவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று (ஆக. 19) சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, "திரையரங்கு உரிமையாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கை குறித்து இந்த வாரம் நடைபெறும் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனைக்கு பின்பு முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வாய்தா மேல் வாய்தா கேட்ட ராஜேந்திர பாலாஜி: கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்'