சென்னை: கரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு சிபிஎஸ்இ (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அவர்கள் ஏற்கனவே பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டன.
பொதுத்தேர்வு எப்படி நடத்தப்படும்?
இந்நிலையில் இந்தியாவில் தற்பொழுதும் கரோனா தொற்று முற்றிலும் குறையாத நிலை உள்ளது. எனவே மீண்டும் கரோனா தொற்று அதிகரித்தாலும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிமுறைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கி உள்ளது.
இது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனோ தொற்று காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டாகப் பிரித்து நடத்தப்படும் என ஏற்கனவே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.
அதன்படி முதற்கட்ட தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் எனவும், 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரிவாகத் தேர்வு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பில் 114 பாடப்பிரிவுகளும், 10ஆம் வகுப்பில் 75 பாடங்களும் இருக்கின்றன. 189 பாடங்களுக்கான தேர்வுகள் குறைந்தது 40 முதல் 45 நாள்கள் நடத்தப்படும். எனவே சிபிஎஸ்இ இரண்டு பிரிவாகத் தேர்வினை நடத்துகிறது.
முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகளை அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும். பிறப் பாடங்களில் ஒரு பாடத்திற்கான தேர்வினை பள்ளிகளில் மாணவர்கள் எழுதிக் கொள்ளலாம்.
90 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறும் கொள்குறி வகையில் விடைகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்து விடையளிக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த விவரங்கள் வரும் திங்கள் (அக். 18) அன்று வெளியிடப்படும்.
தேர்வுகள் காலை 11.30 மணிக்குத் தொடங்கும். மாணவர்கள் காலை 10.30 மணிக்கே தேர்வு அறைக்குள் வர வேண்டும். முதல் கட்டத்தில் நடைபெறும் தேர்வு மதிப்பெண்களுடன், இரண்டாம் கட்டத் தேர்வு மதிப்பெண்களையும் கணக்கிட்டு பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தீபாவளி: ஆவின் பொருள்களை ரூ.2.2 கோடிக்கு விற்பனை செய்ய திட்டம்