சென்னை: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு மையத்தில், தேசிய தன்னார்வ ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், "நாட்டில் ரத்த தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கரோனா தொற்று காலத்தில் மாநிலம் முழுவதும் 430 பேருக்கு பிளாஸ்மா தானம் வழங்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 405 பேருக்கு பிளாஸ்மா தானம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா நோய்ப் பரவல் கட்டுக்குள் உள்ளது. அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துள்ளன. தற்போது கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளில் பாதிப்பு அதிகமாகிறது. அதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.
கரோனா இறப்பு சதவீதம் 1.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பொருளாதாரம், வாழ்வாதாரம் என்ற கவனம் திரும்பினாலும், கரோனாவைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை முழு கவனத்துடன் நடவடிக்கை எடுத்துவருகிறது.
முதலமைச்சரின் சிந்தனையில் உதித்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு சட்டமாக மாறும்.
இந்த இட ஒதுக்கீட்டைப் பெற முதலமைச்சர் முழு முயற்சி எடுத்துவருகிறார். ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார். ஒப்புதல் பெறக்கூடிய காலத்தைத் பொறுத்து இந்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க : ஓபிஎஸ்-யுடன் சந்திப்பு நிறைவு: ஈபிஎஸ்-யுடன் ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள்