சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் 24ஆம் தேதிமுதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முற்றிலும் ரத்துசெய்யப்பட்டது.
இதனால் 2019-20 கல்வியாண்டில் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. மேலும், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டன.
2020-21 கல்வியாண்டில்...
2020-21இல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு (TN Public Exams) நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, 9, 10, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மட்டும் பதிவுசெய்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதத்தில் வழக்கமாகப் பள்ளிகள் திறக்கப்படும். கரோனா இரண்டாவது அலையின் காரணமாக, நடப்புக் கல்வியாண்டிற்கான வகுப்புகள் இரு கட்டங்களாகத் திறக்கப்பட்டன.
நேரடி வகுப்புகளுக்குத் தொடர் பாதிப்பு
ஒன்பது முதல் 12ஆம் வகுப்புகள் வரை கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்தும், அடுத்தகட்டமாக ஒன்று முதல் 8ஆம் வகுப்புகள் வரை நவம்பர் 1ஆம் தேதியிலிருந்தும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
தற்பொழுது, வடகிழக்குப் பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்த இயலாததால், மாணவர்களுக்குப் பாடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மே மாதத்தில் முழு ஆண்டுத் தேர்வா?
இந்நிலையில், நடப்புக் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகளை மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசுத் தேர்வுத் துறை மேற்கொண்டுவருகிறது. ஆனாலும் மாணவர்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப் போதுமான கால அவகாசம் இல்லாமல் இருக்கிறது.
எனவே, மாணவர்கள் பொதுத்தேர்வுக்குத் தயாராவதற்கு வசதியாக இரண்டு மாதங்கள் தள்ளிவைத்து பொதுத்தேர்வு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக, மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்வை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்புத் துணைத்தேர்வு முடிவுகள் நவ. 19இல் வெளியீடு