சமூக ஆர்வலர் ரோஹன் நாகர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்துள்ள மனுவில், ”கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அதே அறிகுறிகளுடன் கூடிய மலேரியா மற்றும் டெங்கு சாய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் காலி மனைகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் சேராமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2013இல் 6,122 டெங்கு பாதிப்புகளும், 2014இல் 2,804 பாதிப்புகளும் மூன்று மரணமும், 2015இல் 4,535 பாதிப்புகளும் 12 மரணமும், 2016இல் 2,531 பாதிப்புகளும் ஐந்து மரணமும், 2017இல் 23,294 பாதிப்புகளும் 65 மரணமும், 2018இல் 4,486 பாதிப்புகளும் 13 மரணமும், 2019 அக்டோபர் வரை 4,779 பாதிப்புகளும் நான்கு மரணமும் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
புரசைவாக்கம் பகுதியில் குப்பைகளை அகற்ற மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால், கொசு உற்பத்தியை தடுக்க மூன்று மாதத்திற்கு ஒருமுறை முழுமையாக குப்பைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன் தண்ணீர் தேங்கும் காலி இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் (பொறுப்பு) துரை.ஜெயச்சந்திரன், சென்னையில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என மாநகராட்சி ஆணையர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் டெங்கு...அச்சத்தில் மக்கள்...