சென்னை: சட்டபேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி, "தமிழ்நாடு அரசு ஓசூரில் சிப்காட் மற்றும் புதிய விமான நிலையம் அமைக்கும் என தெரிவித்தற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், ஓசூரில் விமான நிலையம் அமைந்தால், பெங்களூரு விமான நிலையத்தை விட பரபரப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார். அதேபோல் கடந்த ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகளை முதலமைச்சர் காகித கப்பல் என கூறியதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "காகித கப்பல் என, தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என விளக்கம் அளித்தார். மேலும், தொழில்துறையில் தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது என்றும், புதிய முதலீடுகளை பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த 10 மாதங்களில் 69.37 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த ஒப்பந்தங்களை முதலீடாக கொண்டு வருவது முக்கியம் என்றும், புதிய முதலீடு, தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் சென்னையை சுற்றி மட்டும் இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அரசு பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
வளர்ச்சி குறைந்த மாவட்டங்களுக்கு வளர்ச்சிகள் சென்றடைய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம் என்றும், 2021 ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை அந்நிய முதலீடு 4 விழுகாட்டிலிருந்து 5 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். 10 வருடத்தில் இல்லாத தொழில் வளர்ச்சியை கடந்த 10 மாதங்களில் நடத்தி இருக்கிறோம் என்றும் ஸ்டாலின் கூறினார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருந்தால் மட்டுமே தொழில் வளர்ச்சி பெறும், அதனால் தமிழ்நாட்டை தொழில்துறை மாநிலமாக மாற்றுவோம், அதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பாராமல் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்