காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், நாயகன்குப்பம், பழையசீவரம், ஊத்துக்காடு பாலாறு சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பழங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் தர்பூசணி பழங்கள் ஆந்திரா, பெங்களூரு தமிழ்நாட்டின் பிற மாவட்டத்திற்கு ஏற்றுமதி செய்துவந்தனர்.
தர்பூசணி பயிர்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் சொட்டு நீர் பாசனம் மற்றும், டீசல் இன்ஜின், மின்மோட்டாரைப் பயன்படுத்தி நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்திருந்தனர். இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் இந்தியா முழுவதும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு மாநில மாவட்ட எல்லைகள் மூடப்பட்டது. எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த தர்பூசணி பழங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் வந்து வாங்குவதும், விவசாயிகள் வெளியில் எடுத்துச் சென்று விற்பனை செய்வதும் முற்றிலும் தடைபட்டுள்ளது.
இந்த தடை காரணமாக அனைத்து நிலங்களிலும் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணியை மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்வதற்கு முழுமையாக தடைபட்டது. இதனால் தர்பூசணி பழங்கள் பழுத்து அழுகி எந்தப் பயனுமின்றி விளை நிலத்திலேயே வீணாகிக் கிடக்கிறது. இதனால் தர்பூசணி பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் வேதனையடைந்து மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் சங்க செயலாளர் பழனி கூறுகையில்:-
தற்போது நல்ல விளைச்சல் வந்து அறுவடை செய்து விற்பனை செய்யும் நேரத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊரடங்கு பிறப்பித்தது. இதனால் அண்டை மாவட்டம் மற்றும் பிற மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
அது மட்டுமல்லாமல் அரசாங்கம் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டதால், தங்களாகவே வாகனத்தில் கொண்டுச் சென்று விற்பனை செய்யவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், அரசாங்கம் வேளாண் துறை உயர் அலுவலர்களின் தலைமையில் நேரடியாக ஆய்வு செய்து மத்திய, மாநில அரசு விவசாயிகளுக்கு இழப்பீடும், நிவாரணமும் வழங்கி தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார்.