தமிழ்நாடு முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வது தொடர்பாக உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசிக்க கடந்த 17ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக முதலமைச்சர் தலைமைச் செயலகம் வராத காரணத்தால் கூட்டம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், குடிநீர் தட்டுப்பாடு சிக்கலை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், எதிர்காலத்தில் இது போன்ற சிக்கல் ஏற்படாமல் இருக்க நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம், ஏரி குளங்களை தூர்வாரும் பணியை தீவிரப்படுத்துவது, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்துஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர கேரள அரசு முன் வந்ததாகவும், அதை தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதாகவும் நேற்று கேரள முதலமைச்சரின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக மறுப்பு தெரிவித்து அறிக்கை கொடுத்தது. இருப்பினும் கேரளாவில் இருந்து ரயில் மூலம் தினமும் நீர் பெறுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.