சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் நகைக்கடை வியாபாரி பரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில்
நோபாளத்தைச் சேர்ந்த சாகர்குமார் என்பவர் கடந்த ஒரு வருடமாக காவலாளியாக வேலை செய்துவருகிறார். இந்நிலையில் பரத்குமார் தனது குடும்பத்தாருடன் கோடை விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இந்த வேளையில் பரத்குமாரின் காவலாளி சாகர்குமார், தனது முதாலாளியின் ஆடி கார் மீது கொண்ட மோகத்தால் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிளாட்டினம் கருப்பு நிற ஆடி காரை திருடிச் சென்றுள்ளார்.
பின்னர் பரத்குமாரின் வீட்டிற்கு அவரது சகோதரர் ஆகாஷ் குமார் வந்து பார்த்தபோது அங்கிருந்த ஆடி கார், வீட்டின் காவாளி மாயமாகி இருப்பது குறித்து தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் காவல்துறையினரிடம் இச்சம்பவ்ம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் திருட்டு வழக்குப்பதிவு செய்து கார் மற்றும் அதை திருடிச் சென்ற சாகர்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு எழும்பூர் தில்லையாடி வள்ளியம்மை சாலை சந்திப்பில் சாகர் குமார் தனது முதலாளியிடமிருந்து திருடிய அதே ஆடி காரில் சென்றபோது, எழும்பூர் போக்குவரத்து காவல்துறையினரின் வாகன சோதனையில் சிக்கியயுள்ளார். அப்போது அவர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் காவல்துறையினரை கண்டு பீதியடைந்த சாகர் குமார், காவல்துறையினரிடம் காரை வைத்துக்கொள்ளுங்கள் காலையில் காவல்நிலையத்தில் வந்து பெற்று கொள்கிறேன் எனக் கூறி சென்றுள்ளார்.
இதனையடுத்து காவலாளி சாகர்குமார் திருடிய ஆடி கார் திருட்டு கார் என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து எழும்பூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருடப்பட்ட ஆடி காரை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், தப்பியோடிய சாகர்குமாரை தேடி வருகின்றனர்.