சென்னை: வேப்பேரியில் வசிப்பவர் மோகன் (64). இவர் அதே பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
அந்த குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கும் ஒருவருடன் மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த நபருக்கு 10 வயது மகள், 3 வயதில் மகன் உள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்நபர் வேப்பேரியில் சொந்தமாக வீடு வாங்கி சென்றார். அங்கு, பெற்றோர் வேலைக்காக வெளியில் செல்வதால், குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காகவும், சிறு சிறு வேலைகளை செய்வதற்காகவும் மோகனை வேலைக்கு வைத்தனர். மோகனும், அந்நபரின் வீட்டிலேயே தங்கி, கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வந்தார்.
பாலியல் தொல்லை
இந்நிலையில் நேற்று (ஆக.29) மோகன் ஒரு வேலைக்காக புரசைவாக்கம் சென்றார். அப்போது, வீட்டிலிருந்த 10 வயது சிறுமி, தன்னை தனியாக விட்டுச் செல்ல வேண்டாமெனவும், தனக்கு உடம்பு வலிப்பதாகவும் கூறி தாயிடம் அழுதுள்ளார்.
இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது வீட்டில் தனியாக இருந்தபோது தன்னிடம் பல முறை மோகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
சிசிடிவி மூலம் சிக்கிய காவலாளி
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், வீட்டிலிருந்த கண்காணிப்பு கேரமாக்களை ஆய்வு செய்தனர். அதில், மோகன், அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது.
உடனடியாக சிறுமியின் பெற்றோர் இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மோகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விசித்திரமான வழக்கு: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது இளம்பெண் மீது போக்சோ