சென்னை:சென்னை மயிலாப்பூர் பாஷா தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அரசு உடற்பயிற்சிக் கூடத்தில் நேற்று (ஜூலை 26) இரவு கஞ்சா போதையில் திடீரென புகுந்த நபர் ஒருவர் பயிற்சியில் ஈடுபட்ட நபர்களைத் தாக்கினார். மேலும் அங்கிருந்த உபகரணங்களையும் அந்த போதை ஆசாமி சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
பின்னர் போதை ஆசாமி தான் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பொதுமக்களை வெட்டிவிடுவதாகக்கூறி, மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் காவல் துறையினர் அராஜகத்தில் ஈடுபட்ட போதை ஆசாமியைப் பிடித்து விசாரிக்க முற்பட்டனர். அப்போது போதை ஆசாமி பிளேடால் உடலில் அறுத்துக்கொண்டு, ’தன்னைப்பிடித்தால் தற்கொலை செய்துகொள்வேன்’ எனவும்; ’போலீசாரையும் வெட்டிவிடுவேன்’ எனவும் மிரட்டல் விடுத்தார். இதனால் திகைத்துப் போன காவலர்கள் போதை ஆசாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்தச்சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் அராஜகத்தில் ஈடுபட்ட இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பதும், இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கஞ்சா போதையில் ஜிம்மில் புகுந்து அட்டூழியம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:மகன் அடித்துவிட்டதாக கூறி ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணால் பரபரப்பு