சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர் முகவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால், பிசிஆர் சோதனை தேவையில்லை எனவும்
தடுப்பூசி போடவில்லை என்றால், வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்கு முன் எடுத்துக்கொண்ட பிசிஆர் சோதனை முடிவுகளை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மே 2ம் தேதி காலை 8 மணியிலிருந்து தபால் ஓட்டுகள் எண்ணப்படும் என்றும், தபால் ஓட்டு வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்றாலும், ஈவிஎம் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஒரு மேஜைக்கு 500 தபால் வாக்குகள் எண்ணப்படும் எனவும், ஒரு தொகுதியில் 5 பூத்களின் விவிபேட் இயந்திரம் எண்ணப்படும் என்றும் அவர் கூறினார். 4 லட்சத்து 99 ஆயிரத்து 964 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவருக்கு மாற்றாக துணை தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்படுவார் என்றும், கரோனா இரண்டாம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என உயர்நீதிமன்றம் கூறியது எழுத்து பூர்வமாக கிடைக்கபெற்றால், தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.