சென்னை: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்களாகப் பணியாற்றிவந்த (ஒப்பந்த மருத்துவர்கள்) வெற்றிச் செல்வன், மோகன்ராஜ் ஆகிய இருவரும், பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு இரு வேறு காலகட்டங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டது.
பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இரண்டு அரசு மருத்துவர்களையும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் நேற்று (நவம்பர் 19) கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இருவரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலில் மூழ்கி விடுதியில் அறையெடுத்த மருத்துவர்கள்
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாகப் பணியமர்த்தப்படும், அனைவருக்கும் வெற்றிச் செல்வன்தான் பணி நேரம் ஒதுக்குவது, விடுப்பு அளிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டுவந்தது தெரியவந்தது.
இந்நிலையில் வெற்றிச் செல்வனும், மோகன் ராஜும் பயிற்சி மருத்துவர்களாகச் சேர்ந்த இரு பெண் மருத்துவர்களிடம் நெருங்கிப் பழகி, பின் காதலித்து வந்ததும், இதில் வெற்றிச் செல்வன் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து பெண் மருத்துவரைக் காதலிப்பதாகக் கூறிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், கரோனா காலகட்டத்தின்போது பணியாற்றிய மருத்துவர்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறையெடுத்துக் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவர்கள் வெற்றிச் செல்வனுக்கும், மோகன் ராஜுக்கும் தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் அறையெடுத்துக் கொடுக்கப்பட்டது. அதே விடுதியில்தான் சம்பந்தப்பட்ட இரு பெண் மருத்துவர்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தீவிர விசாரணை நடத்திய விசாகா கமிட்டி
அப்போது காதலிப்பதாகக் கூறிவந்த வெற்றிச் செல்வனும், மோகன் ராஜும் இரு பெண் பயிற்சி மருத்துவர்களுக்கும் பாலியல் தொல்லை (Chennai GH Doctors rape Case) கொடுத்தது தெரியவந்தது. இதற்கிடையில் வெற்றிச் செல்வனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை அறிந்த பெண் பயிற்சி மருத்துவர், வெற்றிச் செல்வன் தன்னை ஏமாற்றிதை உணர்ந்த பெண் மருத்துவர், இது குறித்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜனிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், மற்றொரு பெண் மருத்துவரும் மோகன்ராஜ் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகப் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக விசாகா கமிட்டி (Vishaka Committee) அமைத்து விசாரணை நடைபெற்றது.
விசாரணையில், வெற்றிச் செல்வன், மோகன் ராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆன நிலையில் மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் விசாகா கமிட்டி அறிக்கையுடன் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் மருத்துவர் மோகன் ராஜ் மீது பாலியல் சீண்டல் வழக்கும், வெற்றிச் செல்வன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. இதனையடுத்து இரு மருத்துவர்களையும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட மருத்துவர்களின் செல்போன்களை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி, இவ்விருவரும் வேறு ஏதேனும் பெண் பயிற்சி மருத்துவர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்: குவாலியர் அமர் சந்திர பந்தியா!