அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது நிழலாக செயல்பட்டுவந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக ஒரு ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவருக்கும் இருந்த உரசல் மோதலாக மாறி தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் அதற்கு ஓபிஎஸ் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார் என்ற கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி அமமுகவில் இருந்தாலும் அவரால் பழையபடி செயல்பட முடியாது. எனவே அவர் இந்த ஆடியோ மூலம் அரசியல் அநாதை ஆக்கப்படுகிறாரா தங்க தமிழ்ச்செல்வன்? என்ற செய்தியையும் நமது ஈடிவி பாரத்தில் நேற்று வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ தொடர்பாக அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேலை ஈடிவி பாரத் சார்பாக நாம் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், ”தங்க தமிழ்ச்செல்வனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. யாரிடமோ பேரம் பேசி இப்படி அவர் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றார்.
இதனையடுத்து கட்சி வெற்றி பெறாது என ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறாரே என கேட்டதற்கு, “அவர் ஏதும் பேசவில்லை. நான்தான் அந்தக் கூட்டத்தின்போது மாற்றி மாற்றி பேட்டி கொடுக்க வேண்டாம்; தவறாகப் போகிறது என அவரிடம் கூறினேன்” என பதிலளித்தார்.
மேலும், தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்த கேள்விக்கு, “அவர் திமுகவில் இணைய இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது” என்று பேசி முடித்தார்.
இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனின் கருத்தை அறிய அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் விளக்கமளித்தால் அதனையும் வெளியிட ஈடிவி பாரத் தயாராக இருக்கிறது.