சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அம்மருத்துவமனையை திறந்துவைத்தார்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாடு சுகாதாரத் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. மருத்துவர்கள் நன்றாக பணியாற்றுகிறார்கள். பல்வேறு நாட்டினரும் இங்கு மருத்துவத்திற்கு வந்துசெல்லும் நிலை உள்ளது. தமிழ்நாடு மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சென்று சாமானிய மக்களுக்கு உதவிட வேண்டும்.
தமிழ்நாடு மருத்துவத்திற்கு மட்டுமின்றி சினிமாவிலும் சிறந்து விளங்குகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு நடிகையாக இருந்தவர். அதேபோல் கருணாநிதி சினிமாவில் எழுத்தாளராக இருந்தவர். தற்போது ரஜினி, கமல் என சினிமா துறையில் உள்ளவர்கள் சாதிக்கிறார்கள்.
தற்போது நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை என்பதால் அரசியல் பேசமுடியாது. ஆயுஸ்மான் பாரத் உள்ளிட்ட பிரதமரின் பல்வேறு திட்டங்களால் உலக நாடுகள் இந்தியாவை திரும்பிப் பார்க்கிறது. சமூக ஊடகங்களை பார்த்துக்கொண்டு பிள்ளைகளை கவனிக்காத நிலை இன்று நீடிப்பது வருத்தமளிக்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நீர்த் தேக்கங்களை சீர் செய்ய வேண்டும்” என்றார்.