சென்னையின் முக்கிய சந்தையாக விளங்கும் கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிக்கும், லாரி ஓட்டுநர்களுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அங்கு வந்து சென்ற பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில்லறை வியாபாரிகளும் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் 14 ரூபாயாக இருந்த பெரிய வெங்காயம் தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது 50 ரூபாயாக உள்ளது.
10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி 40 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் 35 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஒரு கிலோ பீட்ரூட் விலை 30 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காயின் விலை தற்போது இரண்டு மடங்காக உயர்ந்து 60 ரூபாயாக உள்ளது.
மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை பன் மடங்காக உயர்ந்துள்ளது. பீன்ஸ் 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 25 ரூபாய்க்கும், முள்ளங்கி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த சந்தையிலேயே காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் குடியிருப்புப் பகுதிகளில் விற்பனை செய்யும் சில்லறை கடைகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: