சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கு ஆளுநராக டில்லி ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆர்.என்.ரவி தான் பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை,தான் பதவி ஏற்கும்போது எடுத்த இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவே செயல்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் புரிகிறது.
அரசமைப்பு சட்டப்படி ஆளுநரின் கடமை என்ன? : இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 159-இன்படி எடுத்த பிரமாணத்தின் வாக்கியங்களில் உள்ள உறுதிமொழி,அவரது பதவிக் கால கடமைகளான,இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்தையும் பாதுகாப்பது என்பதாகும்.தனது பணிக் காலத்தில் மக்கள் நலனுக்குரிய கடமைகளைச் செய்து,மாநில மக்களின் நல்வாழ்வுக்குரிய பணி செய்தல் அவசியமாகும்.
அத்துடன்,ஆளுநர் என்பவர் பெயரால் அரசு ஆணைகள் வந்தாலும்,அவற்றைச் செயல்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு,ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள அரசையே பொறுத்ததாகும்.இதனை பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகவும் தெளிவாகவும்,திட்டவட்டமாகவும் விளக்கப்படுத்தியும் உள்ளது.
தனிப்பட்ட அதிகாரம் ஆளுநருக்கு எப்போது? : தனிப்பட்ட அதிகாரம் எப்போது ஆளுநருக்கு உண்டு என்றால்,மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கும் நிலையில் மட்டுமே உண்டு. மற்றபடி,மாநில அரசின் கொள்கைக்கு எதிராக அவர் ஒரு போட்டி அரசாங்கம் (A Parallel Government) நடத்த ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நடப்பது என்ன?
மக்கள் நலன் சார்ந்து தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அமைச்சரவை முடிவு செய்து, சட்டமன்றத்தில் மசோதாக்களாக நிறைவேற்றி, ஒப்புதலுக்கு (Assent) ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களை பல மாதங்களாக கிடப்பில் போட்டு வைப்பது எவ்வகை நியாயம்? அரசமைப்புச் சட்டப்படி திருப்பி அனுப்பலாம் அல்லது திருத்தம் கோரலாம்.
அரசமைப்புச் சட்ட 200 ஆவது பிரிவுப்படி நான்கு வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றவே முடியும்.
1. ஒப்புதல் தருவது அல்லது
2. நிறுத்தி வைப்பது
3. குடியரசுத் தலைவரின் கருத்திற்கு அனுப்பலாம்
4. (நிதி சம்பந்தமான மசோதாவானால்) சட்டமன்ற மறு ஆய்வுக்குப் பரிந்துரைக்கலாம்.
இவற்றைக்கூட,கால நிர்ணயம் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை என்று வியாக்கியானம் செய்து,எவ்வளவு காலம் வேண்டுமானாலும் கிடப்பில் போடக்கூடாது என்பதற்குப் பல தீர்ப்புகள் சட்ட விளக்கமாகவே உள்ளன!
அவதூறு செய்யலாமா ஆளுநர்? : தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர்,தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை,மாநிலக் கல்விக் கொள்கைக்கு எதிராகவே கல்வி சம்பந்தமாக அமைச்சரவையின் மசோதாக்களை ஏற்க மறுக்கிறார்.அதற்கு அவரது மறுப்பு அல்லது விளக்கம் தேவையானால்,மாநில அரசுக்கு அனுப்பவேண்டியதுதான் முறை அவருடைய கடமை.
பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உரியது என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவையும் கிடப்பில் போட்டுள்ளார்.
சில நாட்களுக்குமுன் செய்தியாளர்களை (எல்லோரையும் அல்ல குறிப்பிட்ட சிலரை) ஆளுநர் மாளிகைக்கு அழைத்து,ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்து,அந்த மசோதா பற்றி அவரது மறுப்புரை கருத்துகளை மாநில அரசுக்குத் தனியே எழுத வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தை மீறி,இவர் தனியே இப்படி செய்தியாளர்களிடையே கூறுவது அரசிடம் கூறுவதற்கு முன்பே இப்படி வெளியில் சொல்வது அரசமைப்புச் சட்டத்தை மீறிய அரசமைப்புச் சட்ட விரோத (Unconstitutional) செயல் அல்லவா?
மாநில அரசுக்கு அவரே திருப்பி அனுப்புவதை அரசு தெரிந்துகொள்ளுமுன்,செய்தியாளர்களிடம் பேட்டியில் கூறுவது எவ்வகையில் அரசமைப்புச் சட்ட நெறிமுறைக்கு ஏற்புடையது?
ராஜ்பவனில் சனாதன விருதா? : ‘சனாதனம்‘பற்றிய தனி ஆவர்த்தனம் செய்யும் ராஜ்பவன் புதிதாக தனியே விருதுகளை வழங்கப் போகிறதாம்! போட்டி அரசு என்பதைத் தவிர இவை வேறு எதைக் காட்டுகின்றன இத்தகைய நடவடிக்கைகள்?
ஆட்சிக்கு வர முடியாத பல மாநிலங்களில்,எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்,ஆளுநர்களை விட்டு அந்தந்த அரசுகளுக்கு எதிராக இப்படி முட்டுக்கட்டைகளைப் போட்டு செயல்பட முடியாத தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகள் (Anti-constitutional) அல்லவா?
‘மதச்சார்பற்ற அரசு’ என்று அரசமைப்புச் சட்ட பீடிகை கூறும்போது,சனாதனம் பற்றிப் பேசுவது,அது முழுக்க முழுக்க ஹிந்துத்துவா,ஹிந்துராஷ்டிர அமைப்புக்கான பிரச்சாரம் என்பதை ஆளுநருக்கோ அல்லது அவருக்கு வக்காலத்து வாங்கும் மற்றவர்களுக்கோ புரிய வேண்டாமா?
ஆளுநர் உணர மறுத்தால் : மக்கள் சக்தியைப் புறந்தள்ளிவிட்டு இப்படி மக்களாட்சிக்குப் பதிலாக,பகிரங்கமான எதிர்விளைவுகளில் ஈடுபடுவது ஜனநாயக விரோதம்,அரசமைப்புச் சட்ட மாண்பினை காற்றில் பறக்க விடும்,கடமையை தவறிடும் குற்றம் என்பதை ஆளுநர்கள் உணர வேண்டும்!
உணர மறுத்தால்,மக்கள் உணர வைப்பார்கள்.உண்மையான இறையாண்மையின் உறைவிடம் மக்கள்! மக்கள்!! மக்களே!!! என்பதை யதேச்சதிகாரத்தை நம்புவோர் புரிந்துகொள்ள வேண்டும்! அரசமைப்புச் சட்டமும் அதைத்தான் வலியுறுத்துகிறது",என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலன் குறித்த ஆலோசனை கூட்டம்